ஆற்றூர் துஞ்சிய தேவர் பள்ளிப்படை

12/23/2013 08:23:00 PM

விடியற்காலை 4:30 க்கு அலாரம் ஒலித்தது, மார்கழி மாத குளிர், சாதரணமாக விடுமுறை நாள் என்றாலே 10 மணி வரை உறங்கத் தோன்றும், சக வயதுடைய என் நண்பர்கள் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கிக்கொண்டிருந்தார்கள், பார்க்க பொறாமையாக இருந்தது, நல்ல வேளை அவர்களை "சோழன் வைரஸ்" தாக்கவில்லை என்று நினைத்துக் கொண்டு புறப்பட்டேன்.

திட்டமிட்டபடி சென்னையில் இருந்து நண்பர் மாணிக், ரமேஷ், கணேசன், ஜெய் ஆகிய நண்பர்களுடன் பயணம் துவங்கியது. முதலில் மகேந்திர பல்லவன் விஷ்ணுவிற்காக உருவாக்கிய ஒரே குடவரை கோயிலை பார்த்தோம், இந்த குடவரை குறித்து வேறொரு பதிவில் விரிவாக பார்க்கலாம். அதன் பின் நேராக அன்றைய சோழர்களின் எல்லையான "மேல்பாடி" என்ற ஊரை நோக்கி வண்டியின் சக்கரங்கள் சுழன்றது. "பாடி" என்றால் படைகள் தங்கும் இடம், ஆங்கிலத்தில் "MILITARY BASE" என்று கூறலாம், சென்னையில் கூட "பாடி" என்ற ஊர் அம்பத்தூர் அருகே உள்ளது, அதுவும் படைகள் தங்கிய இடம் தான், சென்னை பாடி "திருவலிதாயம்" சிவன் கோயிலுக்கு அருகே "படவேட்டம்மன்" கோயில் ஒன்றும் உள்ளது, "படைவீட்டு அம்மன்" தான் பின்னாளில் "படவேடம்மனாக மருவி இருக்க வேண்டும், போருக்கு செல்லும் முன்னர் படை வீரர்கள் அந்த அம்மனை வேண்டி இருக்க வேண்டும், சிலர் நவகண்டமும் தரித்திருக்க வேண்டும். பதிவு வேறெங்கோ செல்கிறது, இந்த கோயில் குறித்தும் நாம் இன்னொரு பதிவில் காணலாம். காலை 11 மணிக்கு மேல் பாடியை அடைந்தோம், வற்றிய "பொன்னை" நதியும், பசுமையான வயல்களும், பறவைகளின் கீச்சொளிகளும் எங்களை வரவேற்றது. ஆற்றங்கரை ஓரத்தில் ராஜ ராஜன் திருப்பணி செய்த பராந்தகர் காலத்து அழகான கற்றளி, தாங்கு தளம் முதல் கலசம் வரை முழுவதும் பச்சை கல், அடடா காண கண்கோடி வேண்டும், இந்த கோயிலையும் மீறி வேறு ஒரு விஷயத்திற்காக எங்களின் மனம் படபடத்தது, ஆம் நாங்கள் முக்கியமாக பார்க்க சென்றது அந்த கோயிலுக்கு எதிரிலேயே ஆற்றங்கரை ஒட்டி அமைந்திருக்கும் அரிஞ்சய சோழனின் பள்ளிப்படை தான் அது.

யார் இந்த அரிஞ்சயர்? முதாலாம் பராந்தகரின் கடைக்குட்டி, தக்கோலப் போரில் இறந்த ராஜாதித்தன், சிவனே கதி என்றிருந்த கண்டராதித்தரின் போன்றோரின் அன்புத் தம்பி, தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜ ராஜனின் தந்தையை பெற்றெடுத்தவர், அதாவது ராஜ ராஜனின் தாத்தா இப்படி பல சிறப்புகளை தன்னுள் கொண்டவர் தான் இந்த அரிஞ்சய சோழன். இப்படிப்பட்ட சிறப்புகளை உடைய தன் தாத்தாவின் நினைவாக ராஜ ராஜன் எழுப்பிய பள்ளிப்படை கோயிலை காணத் தான் எங்கள் கண்கள் பரபரத்தது .

எட்டிப் பார்க்க ஆளில்லாமல், அப்படியே யாரேனும் வந்தாலும் திறந்து காண்பிக்க ஆளில்லாமல் தன்னந்தனியே வயலுக்கு நடுவே இருந்த அந்த அழகான கற்றளியை நோக்கி நடந்தோம், நாம் நடக்கும் இந்த மண்ணை ஆயிரம் வருடங்களுக்கு முன் ராஜ ராஜன் நிச்சயம் மிதித்திருப்பார் என்று உள்ளம் துள்ளியது, இது போன்று பைத்தியக்காரத் தனமாக நினைப்பவர்கள் தான் சோழன் வைரசால் தாக்கப்பட்டவர்கள் .

கோயிலை திறந்து காட்ட ஆள் வந்ததும் உள்ளே சென்று பார்த்தால், நாங்கள் கனவிலும் நினைக்காத அளவிற்கு சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய அவ்வளவு அழகான கோயில், தான் கண்ணையே இறைவனுக்கு காணிக்கையாக கொடுக்கும் கண்ணப்பர் அதை வேண்டாம் என்று தடுக்கும் சிவன், வயதுபக்கம் மான் இடது பக்கம் மங்கை என பிச்சாடனார் போன்ற சிற்பங்கள் வெறும் 6 இன்ச் இடத்தில்!! தக்ஷனாமூர்த்தி,பிரம்மா,விஷ்ணு துர்க்கை என கோஷ்டத்தில் இருக்கும் சிற்பங்களை பார்க்க கண் கோடி வேண்டும், உடன் வந்திருந்த நண்பர் மாணிக் 20 வருடம் அமெரிக்காவில் இருந்தவர், "சசி அங்கே வெறும் 100 ஆண்டு கடந்த வரலாற்று பொக்கிஷங்களை மக்கள் எப்படி போற்றுகிறார்கள் என்று நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன், ஆனால் இங்கே ஆயிரம் வருடம் கடந்து இன்னும் பொலிவுடன் இருக்கும் இந்த சிற்பங்களை குறித்து யாருக்குமே அக்கறை இல்லையே, ராஜ ராஜன் தான் தாத்தாவிற்காக ஒரு பள்ளிப்படை எடுப்பித்தான் என்ற செய்தி தமிழகத்தில் இருக்கும் எத்தனை பேருக்கு தெரியும் என்று கூறி வருந்தினார்.

சுற்றி வந்து கொண்டே இருக்கும் போது தெற்கு புறத்தில் அந்த கல்வெட்டு கண்ணில் பட்டது "ஆற்றூர் துஞ்சிய தேவர்க்கு" பள்ளிப்படயாக உடையார் ஸ்ரீ ராஜ ராஜன் எடுபித்த கற்றளி" என்ற வரிகளை பார்த்ததும் மனம் உடைந்தது, எவ்வளவு பாசமாக ஒரு மன்னன் தன் தாத்தாவிற்கு எடுத்த கோயில் இது. வந்து பார்க்க ஆளில்லையே கடவுளே என்று மனம் நொந்தது. அரிஞ்சயர் முன்பு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி இதற்கெல்லாம் எப்போது விடிவு பிறக்குமோ என்று விடை தெரியாமல் வெளியேறினோம்.

(தமிழக அரசு செய்ய தவறிய,சோழர்களின் வரலாற்று பொக்கிசங்களை ஆவணப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள திரு சசிதரன் அவர்களின் முகநூல் பதிவிலிருந்து......!)

https://www.facebook.com/SasidharanGS

You Might Also Like

1 comments

  1. அருமையான பதிவு...கட்டாயம் நானும் ஓர்நாள் சோழ பாட்டனின் ஓய்விடத்தை காணச் செல்வேன்...

    ReplyDelete

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook